News Headlines
You are here: Home » கட்டுரைகள் » மத நிந்தனை வண்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும்

மத நிந்தனை வண்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும்


fdf

ஒரு மதத்தையோ அதன் ஸ்தாபகரையோ நிந்தனை செய்வதும் அதன் மூலம் அந்த மதத்துடையவர்களின் உள்ளங்களைப் புண்படுத்துவதும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.

அண்மையில் புத்தரையும் பௌத்த மதத்தையும் விமர்சிக்கும் வகையில் முஸ்லிம் நபர் ஒருவர் பேசியிருப்பதானது இஸ்லாமிய பண்பாட்டுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமிய பண்பாட்டை மீறும் செயல்

மத நிந்தனை இஸ்லாமிய பண்பாட்டுக்கு எதிரானது என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் இருக்கின்றன.

1. “அல்லாஹ் அல்லாத தெய்வங்களை அழை(த்து வணங்கு)பவர்களை நீங்கள் நிந்தனை செய்யவேண்டாம்… ”(6:108)என்று அல்குர்ஆன் கூறுகின்றது.

2. “உங்களுக்கு உங்கள் மார்க்கம் எனக்கு எனது மார்க்கம்” (109:6) என்ற சகிப்புத்தன்மையை குர்ஆன் கற்றுத் தருகின்றது.

3. பிற மதத்தவர்களோடு வாதிடுவாக இருந்தால் அவர்களைக் கவருகின்ற ‘மிக அழகிய விவாதத்தை’க் கடைப்பிடிக்குமாறு குர்ஆன் வலியுறுத்துகின்றது. “(நபியே) அவர்களுடன் மிக அழகிய விவாதத்தில் ஈடுபடுவீராக” (16:125)

மிக அழகிய விவாதம் எதிரியைக் கூட நண்பனாக்கும் என அல்குர்ஆன் மற்றுமொரு இடத்தில் சுட்டிக்காட்டுகிறது. “மிக அழகிய வழிமுறைகளினூடாக (அவர்களுக்கு) மறுப்பு கூறுங்கள். அப்போது உங்களோடு பகைமை கொண்டிருத்தவர் உற்ற நண்பன் போன்றாகிவிடுவார்”;.

4. இஸ்லாத்தை பிரசாரம் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கை பின்வரும் நபி மொழி கற்றுத்தருகின்றது. “இலகுபடுத்துங்கள் சிரமப்படுத்தாதீர்கள், நற்செய்தி கூறுங்கள் விரண்டோடச் செய்யாதீர்கள்” (புகாரி)

5. நபியைப் பார்த்து அல்லாஹ் கூறுகின்றான். “அல்லாஹ்வின் பேரருள் காரணமாக நீங்கள் அம்மக்களுடன் மென்மையாக நடந்து கொண்டீர்கள். நீங்கள் கடும் சுபாவமுடையவராக அல்லது ஒரு முரடராக இருந்திருந்தால் அவர்கள் உங்களை விட்டு விரண்டோடியிருப்பார்கள்”(3:159)

இத்தகைய பல்வேறு குர்ஆனின் போதனைகள் நபிகளாரின் நடைமுறைகளுக்கு எதிரானதே மத நிந்தனையாகும். மற்றுமொரு மதத்தையோ அல்லது அதன் ஸ்தாபகரையோ நிந்தனை செய்து அம்மதத்தைப் பின்பற்றுபவர்களது உள்ளங்களைப் புண்படுத்தும் செயல் இஸ்லாமிய பண்பாட்டுக்கு அந்நியமானதே.

முஸ்லிம் சமூகத்திற்கு தலைகுணிவு

அத்துடன் மத நிந்தனை முஸ்லிம் சமூகத்தின் பண்பாடுமல்ல. முஸ்லிம் சமூகம் இந்த நாட்டிலும் சரி வேறு நாட்டிலும் சரி மற்றொரு மதத்தையோ அதன் ஸ்தாபகரையோ நிந்தனை செய்யும் பண்பை தனது பரம்பரைச் சொத்தாகப் பெற்றுவந்ததொரு சமூகமல்ல. மாறாக இந்த இழிசெயலுக்கு எதிரான சமூகமாகவே அது இருந்து வந்திருக்கின்றது.

சுமார் ஆயிரம் வருடங்களாக இலங்கை மண்ணில் வாழ்ந்த முஸ்லிம் சமூகம் இத்தகையதொரு மோசமான பண்பாட்டை ஏனைய மதப் பிரிவினர்கள் விடயத்தில் வெளிக்காட்டவோ, பரீட்சிக்கவோ முற்படவில்லை. அத்தகையதொரு சமூகப் பண்பாட்டை கேள்விக்குள்ளாக்கி சமூகத்தை தலைகுணிய வைக்கும் செயலை ஒரு தனிநபர் மத நிந்தனையில் ஈடுபடுவிதினூடாக உருவாக்கிவிடலாம். இனவாதம் மற்றும் மதவாதம் சூடுபிடித்திருக்கும் ஒரு சூழலில் இஸ்லாத்தின் வார்த்தை நாகரீகத்தை விளங்காமல் பேசுவது தலைகுணிவை மட்டுமல்ல பாரிய விபரீதங்களையும் ஏற்படுத்தலாம்.

எனவே இது விடயத்தில் முஸ்லிம் சமூகம் பராமுகமாக இருக்காமல் ஜம்இய்யதுல் உலமா, தேசிய சூரா கவுன்ஸில், சிறிலங்கா முஸ்லிம் கவுன்ஸில் மற்றும் இஸ்லாமிய அமைப்புக்கள், இயக்கங்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்தும் தனித்தனியாகவும் மத நிந்தனைக்கெதிராக தமது கருத்துக்களையும் அபிப்ராயங்களையும் பலமாக முன்வைப்பதோடு இத்தகைய மத நிந்தனைகளை வண்மையாக கண்டிக்கவும் வேண்டும்.

ஒரு சில தனிநபர்களது வரம்பு மீறிய இந்த செயல்களுக்கு சமூகம் பொறுப்பல்ல என்பதனையும் அழுத்தமாக சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

அது மட்டுமல்ல இனவாத, மதவாத சக்திகளுக்கு மறைமுகமாக உதவி செய்து முஸ்லிம் சமூகத்தைப் பலிக்கடாவாக்கும் ஒரு சதியும் இத்தகைய முயற்சிகளுக்குள் மறைந்து கிடக்கின்றதா? என்ற சந்தேகம் இன்றைய சூழலில் எழுப்பப்பட்ட வேண்டியதே. காரணம் இனவாத, மதவாதத் தீ நாட்டில் பற்றியெறிகின்ற சூழலில் மார்க்கம் விளங்காத ஒரு சாதாரண மனிதன் கூட நாகரீகம் தெரியாத பட்டிக்காட்டு பாமரன் கூட எத்தகைய வார்த்தைகளைப் பேச வேண்டும் என்ற உள்ளுணர்வு அற்றவனாக இருக்கமாட்டான்.

அத்தகைய சூழலில் வேண்டும் என்றே பிறரைப் புண்படுத்தும் வகையில் பேசுவதும் விமர்சிப்பதும் சந்தேகத்தை எழுப்பத்தான் செய்யும். ஏதோ ஒரு சக்தியின் கையாளாக இருக்கும் நிலையில் ஒருவர் இப்படிப் பேச முடியுமே தவிர கள நிலவரங்களை உணர்ந்த எந்த ஒரு மகனாலும் இவ்வாறு பேசுவதென்பது சாத்தியமாகாது.

அவ்வாறில்லையாயின் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு பிறிதொரு மதத்தையோ மத ஸ்தாபகரையோ எதிர்த்துப் பேசும் நிலை தோன்றியிருக்கக்வும் கூடும்.

அதிகரித்து வருகின்ற முஸ்லிம் எதிர்ப்புக் கோசங்கள் பள்ளிவாசல் தாக்குதல்கள் போன்றன இந்நிலையை ஏற்படுத்தியிருக்கவும் வாயப்புண்டு. இருப்பினும் பிறிதொரு மதத்தைப் பின்பற்றுகவர்களின் உள்ளங்கள் புண்படுமாறு கருத்துக்களை வெளியிடுவது ஏற்கத்தக்கதல்ல. அதனை முஸ்லிம் சமூகமோ அல்லது ஏதேனுமொரு அமைப்போ அல்லது தனிமனிதனோ முற்றிலும் தவிர்ப்பதே எமது மார்க்கத்திற்கும் சமூகத்திற்கும் நாம் செய்ய வேண்டிய கடமையாகும்.

இனங்களுக்கிடையில் காணப்படுகின்ற நல்லிணக்க சூழலைக் கெடுத்து இன நல்லிணக்கத்தை விரும்புகின்ற நல்லவர்களையும் இனவாதிகளாக மாற்றி நாட்டையும் சமூகத்தையும் மற்றுமொரு இனவாத மதவாத சேற்றுக்குள் புதைக்க முயலுகின்ற சக்திகள் விடயத்தில் முஸ்லிம் சமூகம் விழிப்பாகவும் எச்சரிக்கையாகவும் நடந்து கொள்ள வேண்டும் எனவும்

நன்மைகள் மலரும் பாதையை அமைப்பதில் தூங்கிவிடாமல் உஷாரக நின்று செயல்படுமாறும் சமூகத்தின் சகல தரப்பினர்களையும் மிக மிகப் பணிவோடு வேண்டிக் கொள்கிறேன்.

அபூ R. அப்துல்லாஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top