News Headlines
You are here: Home » கட்டுரைகள் » பயங்கரவாதம் ஒழியுமா? உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

பயங்கரவாதம் ஒழியுமா? உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்


“பயங்கரவாதம்” நவீன உலகைத் தொற்றியிருக்கும் பயங்கர நோய். இது ஒழிக்கப்பட வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். எனினும், அந்த நோய் கட்டுங்கடங்காமல் பரவிக் கொண்டே செல்கிறது.

அமெரிக்கா பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தைப் பிரகடனம் செய்திருக்கின்றது. மேற்குலகை பயங்கரவாதத்திற்கெதிராக அணிதிரட்டியும் இருக்கிறது. உலக மக்கள் அனைவரையும் தனது அணியில் இணைக்கவும் அது முயற்சி செய்து வருகிறது “பயங்கரவாதம்” என்றால் என்ன என்பதை வரையறை செய்யாமலேயே…

வரையறை செய்யாமலிருப்பதே இந்த சக்திகளுக்கு நல்லது. காரணம் தமது விருப்பம் போல் தமது தேவைக் கேற்ப தனிமனிதர்களையும் அமைப்புகளையும் நாடுகளையும் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்து தண்டிப்பதற்கு அப்போதுதான் வசதியாக இருக்கும்.

மேற்கின் வல்லரசுகள் காரணத்துடனோ காரணமின்றியோ ஒருவரைத் தண்டிக்க நினைத்தால் அல்லது ஒருவரைப் பழி தீர்க்க எண்ணினால் இருக்கவே இருக்கிறது பயங்கரவாதச் சங்கு. அந்த சங்கை எடுத்து குறிப்பிட்ட நபருக்கோ அமைப்புக்கோ எதிராக ஊதினால் அந்த நபர் அல்லது அமைப்பு இந்த பூமியின் மேற்பரப்பிலிருந்து அகற்றப்பட வேண்டியது கட்டாயமாகி விடுகிறது. அதனை மறுத்துப் பேசவோ அதனைத் தடுத்து நிறுத்தவோ இப்போதைக்கு உலகில் யாருமில்லை.

இந்த மேற்குப்பாணியை உலகிலுள்ள அதிகாரவர்க்கங்களும் தமது அதிகார பீடங்களைப் பாதுகாப்பதற்காக பின்பற்றி வருகின்றன. அதிகார வர்க்கத்திற்கு தமது பிரச்சினைகளை மறைப்பதற்கான சிறந்த உத்தியாக இந்தப் “பயங்கரவாதம்” எனும் துரும்பு பயன்படுகிறது. யாரையாவது பயங்கரவாதியாக சித்திரித்து விட்டால் அனைவரின் கவனமும் அந்தத் திசையில் குவிந்து விடும். அப்போது தங்களது குறைகள் வெளிவராமலும் பயணத்தில் தடைகள் குறுக்கிடாமலும் பார்த்துக் கொள்வது அவர்களுக்கு இலேசாகி விடுகின்றது.

உலகில் தோன்றியுள்ள இத்தகையதொரு குழப்பமான… மயக்கமான… அச்சம் நிறைந்த சூழல் உலக அமைதியை கேள்விக்குறியாக்கியுள்ளது. உலகில் சட்டங்கள், ஒழுங்குகள் என என்னதான் இருந்தபோதிலும் அவற்றையெல்லாம் மிஞ்சிச் செல்லும் வகையில் “பயங்கரவாதம்” என்ற பேய் தலைவிரித்தாடவே செய்கிறது.

இதில் மற்றுமோர் அதிசயம் என்னவென்றால், பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்று உறுதிபூண்டவர்கள் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதுதான். ஆக “பேய்” அவர்களுடையதுதான். அது சிலபோது ஆதரித்தும் ஆடுகிறது. எதிர்த்தும் ஆடுகிறது. எந்த இடத்தில் எப்படி ஆட வேண்டும் என்று தீர்மானிப்பவர்கள் திரை மறைவில் இருப்பதனால் பயங்கரவாதம் எனும் பேயாட்டம் தற்போதைக்கு உலகிலிருந்து விடைபெறுவதற்கில்லை.

இவ்வாறான நிலையில் உண்மைகளையும் யாதார்த்தங்களையும் உலகத்திற்கு உணரவைப்பதும் சமூகத்தையும் நாட்டையும் உண்மைகளின் பக்கம் விழிப்பூட்டி வழிநடத்துவதும் சான்றோரின் கடமையாகும். அந்தக் கடமையைப் புறக்கணிப்பவர்கள் ஒரு வகையில் பயங்கரவாதத்திற்குத் துணை போகின்றவர்களே!

“பயங்கரவாதம்” என்றால் என்ன?

பயங்கரவாதம் பற்றி அறிந்து கொள்வதற்கு “வன்முறை” யை அடையாளப்படுத்துவது அவசியமாகும். வன்முறை திட்டமிட்டும் நடைபெறலாம், திடீரெனவும் இடம் பெறலாம். பயங்கரவாதம் குறிப்பிடப்பட்ட இலக்குகள் மீது குறிவைத்து நடத்தப்படும் திட்டமிட்ட ஆனால் அநீதியான தாக்குதல்.

வன்முறை: வன்முறையை வரைவிலக்கணப்படுத்துவதானால் எமது கால அனுபவங்களினூடாக அதனைப் பின்வருமாறு கூறலாம்:

“முழு மனித சமூகமும் ஏற்றுக் கொண்ட விழுமியங்கள், சட்டங்கள், ஒழுக்க மாண்புகள் மரபுகள் அனைத்தையும் புறந்தள்ளி விட்டு ஆயுதங்கள், வெடி மருந்துகள், வாயுக்கள் போன்றவற்றின் உதவியோடு பாரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ சேதத்தை விளைவித்தல். அமைதியாகவும் அகிம்சை வழிமுறைகளினூடாகவும் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்காமல் நாசங்களை விளைவிப்பதனூடாக தங்களை நோக்கி பிறரது கவனத்தைத் திருப்புதல். இதன் மூலம் நீதிபதியினதும் பொலிஸினதும் அதிகாரத்தை தங்கள் கைக்குள் கொண்டு வருதல்.”

பயங்கரவாதம்: “பயங்கரவாதம்” என்பது மேலே கூறப்பட்ட வன்முறைகளைப் பிரயோகித்து அப்பாவிப் பொதுமக்களையும் பொது உடமைகளையும் அழித்தல் அல்லது நாசப்படுத்துதல், நல்லவர்கள், கெட்டவர்கள், பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள், சம்பந்தப்படாதவர்கள், வயோதிபர்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராமல்

எல்லோரையும் அழித்து தமது கடும் போக்கைக் கண்டு அனைவரும் அஞ்சும் நிலையை ஏற்படுத்துதல். மக்களை சிரமத்தில் போடும் நோக்கில் அவர்கள் பயன டையும் பொது வசதிகள், சேவைகள் போன்றவற்றை ஸ்தம்பிதமடையச் செய்தல் அல்லது அவற்றை அழித்தல். இவ்வாறு நாசகார வேலைகளில் ஈடுபடுவதன் மூலம் தங்களது கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்டவர்களை இணங்க வைக்க முயற்சித்தல்.

விமானக் கடத்தல், குற்றம் செய்யாதவர்களைப் பணயக் கைதிகளாகத் தடுத்து வைத்தல், சுற்றுலாப் பயணிகளைத் தாக்குதல், போக்குவரத்து வசதிகளைத் தாக்கியழித்தல், வங்கிக் கொள்ளை, பொதுமக்கள் நடமாடும் இடங்களில் குண்டுத் தாக்குதல் களை மேற்கொள்ளல் போன்ற இன்னோ ரன்ன நாசகார வேலைகள் பயங்கரவாதத்திற்கான உதாரணங்களாகும்.

இத்தகைய பயங்கரவாதச் செயல்களுக்கோ அல்லது வன்முறைகளுக்கோ இஸ்லாத்தில் கிஞ்சிற்றும் அனுமதியில்லை. இஸ்லாத்தின் நோக்கங்களுக்கும் அடிப்படைகளுக்கும் முற்றிலும் முரணான செயற்பாடுகளே பயங்கரவாதமும் வன்முறைகளுமாகும்.

வன்முறை மற்றும் பயங்கரவாத செயற்பாடுகள் பொதுவாக அரசுகளுக்கெதிராகவும் இனங்களுக்கெதிராகவும் மேற்கொள்ளப்படுகின்றன. அதேவேளை, அரசுகள் மூலம் கட்டவிழ்த்துவிடப்படும் பயங்கரவாதங்களும் இல்லாமலில்லை. சில பயங்கரவாதங்கள் அரச அனுசரணையுடன் அரங்கேற்றப்படுவதுமுண்டு. எவ்வாறாயினும் பயங்கரவாதம் என்பது இன்று உலகெங்கிலும் கட்ட விழ்த்துவிடப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் சர்வதேச பயங்கரவாதத்தின் ஊற்றாக வல்லரசுகள் காணப்படுகின்றன என்பது ஒரு கசப்பான உண்மை.

காலத்துக்குக் காலம் உலகில் வல்லரசுகள் தோன்றுகின்றன. இந்த வல்லரசுகள் உலகின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் சுபீட்சமான மனித வாழ்க்கைக்கும் பெரும்பங்காற்றலாம். அல்லது தமது வல்லாதிக்க நோக் கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு நாசகார சதி முயற்சிகளிலும் ஈடுபடலாம்.

முதல் நோக்கத்தை நிறைவேற்ற முயற்சிக்கும்போது அத்தயை வல்லரசுகள் உலகிற்கு ஓர் அருட்கொடையாக மாறுகின்றன. இரண்டாவது நோக்கத்தை நிறைவேற்ற முயற்சிக்கும்போது அந்த வல்லரசுகளே பயங்கரவாதத்தின் ஊற்றாக மாறுகின்றன. இரண்டாவது நோக்கத்தின் விளைவுகளையே இன்றைய வல்லரசுகளால் உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச மட்டத்தில் வல்லரசுகள் செய்கின்ற இதே வேலையை ஒரு தேச மட்டத்தில் அதன் அரசும் இராணுவமும் செய்வதையும்

பார்க்கின்றோம். சிரியா இதற்கான சிறந்த உதாரணமாகும். இதுவரை ஓர் இலட்சம் மக்களின் உயிரைக் குடித்து ஏப்பம் விட்டிருக்கிறது சிரியாவின் அரச பயங்கரவாதம்.

மற்றோர் அரச பயங்கரவாதம் உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாதவாறு கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது. பலஸ்தீன மண்ணில் கடந்த இரண்டாயிரம் வருடங்களில் குடியேறி வாழ்ந்து ஆட்சி செய்த உரிமை எதுவுமற்ற ஓர் இனம் (யூதர்கள்) அமெரிக்காவினதும் பிரித்தானியாவினதும் உதவியோடு பலஸ்தீனை ஆக்கிரமித்து அந்நாட்டின் பூர்வீக பிரஜைகளை பலவந்தமாக அகதிகளாக்கி தமது சொந்த இடத்தில் வாழ்வது போன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

சிறுவர்கள், பெண்கள் வயோதிபர்கள் உட்பட பலஸ்தீன மக்களை நினைக்கும் போதெல்லம் கொன்று குவிப்பது யூத அரச பயங்கரவாதத்தின் ஒரு சித்து விளையாட்டாகும். கட்டிடங்களையும் குடியிருப்புக்களையும் அழித்தல், பயிர் நிலங்களைத் தீக்கிரையாக்குதல், பயிர் நிலங்களின் நிலத்தடி நீரை வற்றச் செய்தல், வளமான பிரதேசங்களில் வாழும் பலஸ்தீனர்களைப் பலவந்தமாக வெளியேற்றல் போன்றன யூத அரசின் பயங்கரவாதப் பொழுதுபோக்குகளாகும்.

இவ்வாறு இன்றைய உலகின் வல்லரசுகள் முதல் பல்வேறு சிறு சிறு குழுக்கள் வரை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பழகிப்போன ஒரு பரிதாபத்தையே காண முடிகிறது. பாதாள உலகக் கோஷ்டிகள், மாபியாக்கள், பாஸிஸ்டுகள் போன்றோர் பெரும் செல்வாக்கோடு வாழும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது கவலை தருகின்றது. இவற்றைக் கண்டு கொள்ளாமலேயே இன்றைய உலகின் தலைவர்கள் தமது இருப்பைப் பாதுகாக்கும் நோக்கில் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். தேவைப்படும்போது தமக்கும் தமது இருப்பைப் பாதுகாப்பதற்கு இந்தப் “பயங்கரவாத மருந்து” பயனளிக்கலாம் என்று அவர்கள் கருதியிருக்கலாமல்லவா? அவ்வாறாயின் உலகின் மற்றுமொறு தலைவரால் கட்டவிழ்த்துவிடப்படும் பயங்கரவாதத்தை எப்படி இவர்கள் தட்டிக் கேட்பார்கள்? சிரியாவின் அஸதை உலகிலிருக்கின்ற ஏனைய அஸத்களால் தட்டிக் கேட்க முடியாமல் இருப்பது அதனால்தான் போலும்.

ஆக “பயங்கரவாதம்” ஒரு சர்வதேச தோற்றப்பாடாக மாறிவிட்டது. உலகின் தலைவர்கள் அதனைப் போஷித்து வளர்க்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, அது இன்று பட்டி தொட்டிகளிலெல்லாம் பரவ ஆரம்பித்துள்ளது. சாதாரண மனிதனின் அன்றாட மனப்பாங்காக மாறிவிடும் அளவுக்கு அது வியாபித்து விட்டது.

சிறியதொரு பாதிப்பையும்கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் வன்முறை மூலமாக அதனை எதிர்கொள்வதற்கு இன்றைய சாதாரண மனிதர்கள் துணிந்துவிடும் நிலை தோன்றியுள்ளது. இதனை இனிக் குறைக்க முடியாது. இது இன்றைய உலகில் தவிர்க்க முடியாத ஒரு தோற்றப்பாடும் யதார்த்தமும் ஆகும் என்பதைக் கசப்போடு மென்று விழுங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாதா?

பயங்கரவாதம் என்றால் என்ன? அதனை உற்பத்தி செய்பவர்களின் நோக்கங்கள் எவை? பயங்கரவாதத்தை உரமூட்டி வளர்க்கும் சக்திகள் எவை? அவை பயங்கரவாதத்தின் மூலம் அடைய விரும்பும் இலக்குகள் யாவை? அந்த இலக்குகளை குறிப்பிட்ட சக்திகள் அடையப் பெறாமல் தடுப்பதற்கான வழி முறைகள் என்ன? பயங்கரவாதத்திற்கெதிராக சர்வதேச ஒத்துழைப்பை ஒன்றுதிரட்டுவதற்கான பொறிமுறையை எவ்வாறு அமைக்கலாம்? என்பன போன்ற அம்சங்கள் அடங்கியதாக “பயங்கரவாதத்திற்கெதிரான சர்வதேச சாசனம்” ஒன்று முதலில் தயாரிக்கப் பட வேண்டும். ஒவ்வொரு நாடும் சமூகமும் இனமும் தான் எதிர்கொள்ளும் பயங்கரவாதத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான ஒரு சாசனமாக அது திகழ வேண்டும்.

இவ்வாறானதொரு சர்வதேச சாசனம் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இன்றியமையாததாகும். சர்வதேசமும் ஏற்றுக் கொள்கின்ற மனித உரிமை சாசனம் போன்று பயங்கரவாதத்திற்கெதிரான சர்வதேச சாசனம் ஒன்றின் அவசியம் இன்றைய காலகட்டத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாகும். எனினும், ஐ.நா.வோ அல்லது அமெரிக்கா போன்றதொரு வல்லரசோ இவ்வாறானதொரு சாசனத்தைக் கொண்டுவரப் போவதில்லை கொண்டு வந்தால் சர்வதேசப் பயங்கரவாதிகளின் முகத்திரை கிழிந்து விடும். சாசனம் எப்படிப் போனாலும் “பயங்கரவாதம் என்றால் என்ன?” என்பதை வரைவிலக்கணப்படுத்தவும்கூட இன்றைய சர்வதேச சக்திகள் தயாரில்லை.

அமெரிக்காவின் பயங்கரவாத ஒழிப்புத் திட்டம்

பயங்கரவாதிகள் யார்? என்பதைத் தீர்மானிக்கும் ஏகபோக உரிமையை இன்று அமெரிக்காவே குத்தகைக்கு எடுத்திருக்கிறது. அமெரிக்கா தயாரிக்கும் பட்டியலில் யார் பயங்கரவாதிகள் எனப் பெயரிடப்பட்டிருக்கிறார்களோ அவர்கள்தான் உலகின் பயங்கரவாதிகள். அந்தப் பட்டியலில் தனிமனிதர்கள், அமைப்புகள், அரசாங்கங்கள் என காலத்துக்கு காலம் இடம்பெறுபவர்கள் இருப்பர். அந்தப் பட்டியலில் குறிப்பிட்ட காலம்

இருந்து விட்டு பயங்கரவாதம் எனும் அவப் பெயரிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள் பாக்கியசாலிகளே. அமெரிக்காவின் விசுவாசத்திற்கும் அன்புக்கும் பாத்திரமாகும் பேறு பெற்றவர்களே அவ்வாறு விடுதலை பெற முடியும்.

மொத்தத்தில் மேற்கின் வல்லரசுகளோடு இணைய மறுப்பவர்களே பயங்கரவாதிகளாவர். அமெரிக்கா தனது தேவைக்கேற்ப பயங்கரவாதத்தை அவ்வப்போது அடையாளப்படுத்தும். சிலதைக் கண்டு கொள்ளும் சிலதைக் கண்டு கொள்ளாதிருக்கும். எது எவ்வாறாயினும் அமெரிக்காவின் போக்கினை சரிகண்டு அதனோடு அனைவரும் இணைந்திருப்பதே பயங்கரவாதத்திற் கெதிரான அமெரிக்காவின் திட்டமாகும். அந்தத் திட்டத்தின் படி “பயங்கரவாதம்” என்பது அமெரிக்காவின் வசதிக்கேற்ப அவ்வப்போது வரைவிலக்கணப்படுத்தப்படும். அதனை எவரும் மறுக்க முடியாது.

செப்டம்பர் 11இல் இடம்பெற்ற அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலோடு அமெரிக்கா ஆரம்பித்த பயங்கரவாதத்திற்கெதிரான போர் இன்று உலகின் பட்டி தொட்டிகளெல்லாம் பரவியிருக்கின்றது. மேலும் அதனைப் பரவச் செய்யும் முயற்சியன்றி குறைக்கும் முயற்சிகளை இன்றைய சூழலில் கண்டுகொள்ள முடியாதிருப்பது கவலையே.

அனுமதிக்கப்பட்ட யுத்தம்

இன்றைய உலக அனுபவங்கள் எமக்குணர்த்தும் உண்மை யாதெனில், பயங்கரவாதத்திற் எதிரான போரை ஆரம்பித்தவர்கள்தான் சர்வதேச பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண்களாக இருக்கிறார்கள். அவர்களது திட்டத்தின்படி அவர்கள் யார் மீதும் ஈவிரக்கமின்றி போர் தொடுக்கலாம் போரைத் திணிக்கலாம் வளங்களை அழிக்கலாம் அல்லது கொள்ளையடிக்கலாம். அதற்கு “அனுமதிக்கப்பட்ட யுத்தம்” என்று பெயர். “ஈவிரக்கமற்ற, அநீதியான, ஆதிக்க நோக்கம் கொண்ட, மேலாதிக்க வெறிபிடித்த ஆக்கிரமிப்புகளை எதிர்த்துப் போரிடுவது அவர்களின் யார்வையில் “பயங்கரவாதம்” ஆகும். அத்தகைய எதிர்ப்புகளை முற்றாக அழிப்பதே பயங்கரவாதத்தை ஒழிப்பதாகும்.

இந்தப் போக்கின் மூலம் பயங்கரவாதம் ஒழிக்கப்படுமா? வளர்க்கப்படுமா? என்பதை உலகம் உணர்ந்ததாகத் தெரியவில்லை. வல்லரசுகளின் இந்தப் போக்குதான் நாம் முன்பு குறிப்பிட்டது போல பட்டிதொட்டிகளில் எல்லாம் பயங்கரவாதம் வளர்வதற்கு ஏதுவாக இருக்கிறது.

இந்நிலை மாறவேண்டுமானால் பயங்கரவாதத்திற் கெதிரான சர்வதேச சாசனம் ஒன்றைப் போல “அனுமதிக் கப்பட்ட யுத்தம்” ஒன்றுக்கான சர்வதேச சாசனமும் தயார் செய்யப்பட

வேண்டும். யுத்தங்களை நினைத்த மாத்திரத் தில் யாரும் துவங்க முடியாது. அவ்வாறு துவங்கினால் அது சர்வதேச அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படுவதும் பின்னர் உலகம் ஏற்றுக் கொண்ட வரையறைகளுக்கேற்ப அந்த யுத்தம் நியாயப்படுத்தப்படுவதும் வரையறைகளை மீறினால் அதனை சர்வதேச சமூகம் தடுத்து நிறுத்துவதும் அந்த சாசனத்தின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும்.

தனிமனிதன் மீதான ஒரு குற்றச்சாட்டை நீதி விசாரணைக்குட்படுத்தி குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் உரிய தண்டனை வழங்குவது போல அமைப்புக்கள், இயக்கங்கள், அரசாங்கங்கள் போன்றவற்றை விசாரித்து அவற்றை சமாதானத்திற்குக் கொண்டு வருவதற்கும் குற்றங்களை ஒப்புக்கொண்டு பரிகாரங்களை வழங்க மறுக்கும் பட்சத்தில் அவற்றுக்கெதிராக சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அந்த சாசனம் விரிவாகப் பேச வேண்டும்.

எனினும், “பயங்கரவாதம்” என்றால் என்ன? என்பதைக்கூட வரையறை செய்யாமல்.. யார் உண்மையான பயங்கரவாதி என்பதை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லாமல்…. மயக்கமான குழப்பம் நிறைந்த ஒரு சூழ்நிலையில் தொடர்ந்தும் உலகம் இருப்பதனையே இன்றைய அரசுகளும் வல்லரசுகளும் விரும்புகின்றன. பயங்கர வாதத்தின் சூத்திரதாரிகள் வேறு எதைத்தான் விரும்பு வார்கள்?!!

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top